உறவினர்கள் கூடி
நிற்க..
உலகமே மறந்து
உங்கள் முகம்
பார்க்க
ஆபரேஷன் theatre அறைக்கதவின்
முன் நின்று இருந்தேன் நான்!
ஒரு நாள் வலியுடன் போராடிய பின்
ஆபரேஷன் செய்து கொள்ள
தன் உடலையும் மனதையும் உறுதியாக்கிக் கொண்டாள்
உங்கள் தாய்!
உங்களை அன்னையின் கருவறையில்
இருந்து வெளியே எடுக்கும் பொழுது
நான் பார்க்க முடியவில்லை..
மருத்துவர் வாயிலாக தூது வந்தது..
அன்னையின் கால்களை
கெட்டியாய் பிடித்து கொண்டான் ஒருவன் என்று..
கருவறையில் இருந்து வெளியே வர
நீங்கள் செய்த போராட்டம் போல..
உங்களை என்னிடம் காட்டிய பொழுது
என் உணர்வுகள் என்ன என்பதை
நான் அறியேன்..
எனது உயிரை அவளது மெய்யோடு
குழைத்து
வார்த்தெடுத்த வண்ணங்களைக் கண்டதைப் போல..
விண்ணிலே இருந்து பரிசாய் வந்த
விண்மீன்களைக் கண்டதைப் போல..
அள்ளி அணைக்க தூண்டும்
கதகதப்பான உங்கள் அழகைக் கண்டு
அன்பு வெள்ளம் பெருக்கெடுத்து
எங்கோ மிதந்து கொண்டு இருந்தேன்..
ஆயிரம் சிந்தனைகள்
ஆயிரம் ஆயிரம் கனவுகள்..
நீங்கள்
தவழ்ந்து
நடந்து
எங்கள் தோழர்களாக வளர்ந்து என..
நாங்கள் கண்ட கனவுகள் பட்டியல் நீளம்..
கடவுளை வேண்டி
ஓடிக்கொண்டிருக்கிறேன்
அனைவரின் கனவுகளை
நினைவாக்க வேண்டி..
Leave a comment